மீண்டும் அம்பலப்பட்டிருக்கும் பலவீனம்?

0
133

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நிறைவடைந்திருக்கின்றது.
மீண்டும் மாகாண சபை விவகாரம் அத்துடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசியிருக்கின்றனர்.
வழமைபோல் இறுதி முடிவின்றியே பேச்சு முடிவுற்றிருக்கின்றது.
இந்தப் பேச்சும் வழமைபோல் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது.
ஆனால், சம்பந்தன் அவரின் வயதின் காரணமாக இவ்வாறான பேச்சுகளில் பங்கு கொள்ளக்கூடிய நிலையில் இல்லை.
ஏனெனில், சம்பந்தன் பேசுகின்ற விடயங்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.
இந்த நிலையில், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக நடைபெறும் பேச்சுகளை பரிகசிப்புக்குரிய விடயமாக மாற்றும் வகையிலான செயல்பாடுகளை
இனியும் தொடர்வது முறையல்ல.
சம்பந்தனால் இயலாவிட்டால் அவர் பெருந்தன்மையுடன் இதுபோன்ற பேச்சுகளில் பங்குகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை அவரின் பங்குபற்றல் குறியீட்டு ரீதியில் முக்கியத்துவம் என்றால், அவரின் சார்பில் பிறிதொருவரே விடயங்களை பேசவேண்டும்.
அதேபோன்று இதுபோன்ற பேச்சுகளில் பங்குகொள்ளும்போது -பங்குகொள்ளும் தமிழ்த் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ரணிலுக்கு முன்னால் விடயங்களை தங்களுக்குள் விவாதிப்பதாக இருக்கக்கூடாது.
ஒரு பாதிக்கப்பட்ட தரப்பு தங்களுக்குள் தெளிவில்லாமல் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் பேச்சில் ஈடுபடக்கூடாது.
இது தொடர்பில் ‘ஈழநாடு’ முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தியிருக்கின்றது.
ஆனால், முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
ஏற்கனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றே பேச்சில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதனை சி. வி. விக்னேஸ்வரனே முன்வைத்திருக்கின்றார்.
ஆனால், குறித்த ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் கையெழுத்திடவில்லை.
குறித்த ஆவணம், மாகாண சபை தேர்தல் இடம்பெறும் வரையில் ஓர் ஆலோசனை சபையின் மூலம் மாகாண சபையை நிர்வகிக்கும் பரிந்துரையை முன்வைக்கின்றது.
இதனை சி. வி. விக்னேஸ்வரன் ஆதரிக்கின்றார்.
ஆனால், மற்றவர்கள் ஆதரிக்கவில்லை.
உண்மையில் இந்த விடயங்களோடு விக்னேஸ்வரன் மல்லுக்கட்ட வேண்டியதில்லை.
நெருக்கடி நிலைமையின் காரணமாக மாகாண சபை இயங்க முடியாதபோது ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் இடைக்கால ஆலோசனை சபையொன்றை நியமிக்க முடியும்.
ஆனால், அதனை ஏன் தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்பதில் விக்னேஸ்வரனிடம் தெளிவில்லை.
அவ்வாறானதொரு சபையை உருவாக்க வேண்டுமெனின் அதனை ஜனாதிபதியால் செய்ய முடியும்.
அதற்கு தமிழ் கட்சிகளின் ஆதரவோ அல்லது அங்கீகாரமோ தேவையில்லை.
ஆனால், இந்த விடயங்கள் மீண்டும் தமிழர் தரப்பின் பலவீனமான அரசியலையே அம்பலப்படுத்தியிருக்கின்றது.
ஒருபுறம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் வெறுமனே தங்களுக்குள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர் – மறுபுறம், பேச்சுகளை சாதகமாகக் கையாளவேண்டிய பொறுப்பிலிருக்கும் கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சியினர் தங்களுக்குள் தயாரிப்புகள் இல்லாமல் பேச்சுகளை எதிர்கொள்கின்றனர்.
பேச்சுகளில் பங்குகொண்டேயாக வேண்டும் – அதனை மறுதலிப்பது முதிர்ச்சியான அரசியல் இல்லை – ஆனால், பேச்சுகளை முதிர்ச்சியுடன் கையாளவும் வேண்டும்.