கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்த நிலையில் நேற்றையதினம் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதாவது ரஷ்யா, தனது ஆயுத கிட்டங்கில் பலம் வாய்ந்த ஏவுகணையான கின்சால் ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவின் பெல்கோரட் பகுதி நோக்கி டிரோன் படையை உக்ரைன் அனுப்பியது. இருப்பினும் அதனை ரஷ்ய ராணுவத்தின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளன.
கின்சால் (Kh-47M2 Kinzhal) என்பது வான்வழி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும், இது அதன் விலை மற்றும் குறைந்த இருப்பு காரணமாக ரஷ்யப் படைகளால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், போர் தொடங்கியதிலிருந்து ஒரு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார்.