நுவரெலியா தலவாக்கலை இந்துக் கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து, கைவிடப்பட்ட நிலையில், பெண் சிசு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்துள்ளார். தலவாக்கலை லிந்துலை நகர சபை ஊழியர்கள், கோவில் பகுதியை சுத்தம் செய்ய சென்ற போது, முச்சக்கரவண்டிக்குள் சிசு அழும் சத்தம் கேட்டு, குறித்த ஊழியர்கள் முச்சக்கரவண்டியை பார்த்த பொழுது, பின் இருக்கையில், சிசு ஒன்று காணப்பட்டது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட பிறந்து 12 முதல் 14 நாட்களேயான பெண் சிசு, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் உள்ள, பெண் பொலிஸ் அதிகாரி, தாய்ப்பால் வழங்கியதை அடுத்து, குழந்தை, லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக, பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார். அத்துடன், கண்காணிப்பு கமெராவின் காட்சிகளை அடிப்படையாக கொண்டு, சிசுவை கைவிட்டு சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.