தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.
ஆனால், கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த முன் பிணை மனுவை கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி நிராகரித்தது.
தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இந்திகா காலிங்கவம்ச முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி ஒருவர், இந்த மனு தொடர்பான அறிக்கைகள் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தார்
இதனை கருத்தில் கொண்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இந்திகா காலிங்கவம்ச, இந்த மனு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.