கண்டி – நாவலப்பிட்டியில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு வருகைதந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ‘ஒன்றிணைந்து எழுவோம்’ என்ற கருப்பொருளில் பொதுஜன பெரமுன கட்சியினர் நடத்தும் மாநாடு நேற்று நாவலப்பிட்டியில் நடைபெற்றது. மகிந்த ராஜபக்ஷ இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
இதற்காக அவர் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தபோது ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரமுன கட்சியின் கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே செல்ல முயன்றனர். அப்போது பொலிஸார் அவர்களை மறித்து வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டவர்களில் நாவலப்பிட்டி தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் உட்பட 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.