மும்பைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்த சூரியகுமார்

0
58

மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 55ஆவது போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கட்டாய வெற்றியை ஈட்டுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. மும்பை இண்டியின்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முன்வரசை வீரர்களான இஷான் கிஷான் (9), ரோஹித் ஷர்மா (4), நாமன் ஓஜா (0) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க மும்பை இண்டியன்ஸ் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

எனினும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவர் 96 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிக்ஸ் ஒன்றை விளாசி சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் அதுவே வெற்றிக்கான அடியாகவும் அமைந்தது.அதேவேளை, சூரியகுமார் யாதவ்வுக்கு பக்கபலமாக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திலக் வர்மா 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் 35 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.அபிஷேக் ஷர்மா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தன.56 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற நல்ல நிலையிலிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 17 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் பெட் கமின்ஸும் சன்விர் சிங்கும் பிரக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.துடுப்பாட்டத்தில் ட்ரவிஸ் ஹெட் (48), நிட்டிஷ் குமார் ரெட்டி (20), பெட் கமின்ஸ் (35 ஆ.இ.) ஆகிய மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சவ்லா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்