முல்லைத்தீவு முத்தயன்கட்டு குளத்தின் கீழ், 3 ஆயிரத்து 320.5 ஏக்கர் நெற் செய்கையும், 739 ஏக்கர் உப உணவு பயிர்ச் செய்கையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான, சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில், நேற்று, ஒட்டுசுட்டான் நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கையில், முத்தயன்கட்டு குளத்தின் கீழ், 3 ஆயிரத்து 320.5 ஏக்கர் நெற் செய்கையும், உப உணவு பயிர்ச் செய்கை 739 ஏக்கர் அளவிலும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, எதிர்வரும் 3 ஆம் திகதி அன்று, முத்தயன்கட்டு குளத்து நீர் திறந்து விடப்படவுள்ளது.
இந்த பயிர்ச் செய்கைக்கான காலம்,மூன்றரை மாதங்களாகும். தற்போது குளத்தின் நீர் மட்டம் 20 அடியாக காணப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்ட காணிப் பகுதிக்கான மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், முத்தயன்கட்டு குள பொறியியலாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், நெக்டா நிறுவன அதிகாரிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.