முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயாவில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணி வரை 287 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாடு முழுவதும் அதிக மழை பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிவிப்புப்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 250 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உதவி மற்றும் தகவல்களைப் பெற 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 300 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
100 – 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி வடமேற்கு மாகாணத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு – கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.