மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வந்துள்ளமையை வரவேற்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்பாக, மலையகக் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வந்தமையை நாம் வரவேற்கின்றோம்.
இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது.
எனினும், அதற்கான அழைப்பு எமக்கும் இன்னும் விடுக்கப்படவில்லை என்றார்.