மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் டெவன் தோமஸுக்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஐசிசியினால் 5 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி), எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ஈசிபி) மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) ஆகியவற்றின் ஊழல் தடுப்பு விதிகளின் ஏழு பரிந்துரைகளை மீறியதை தோமஸ் ஒப்புக்கொண்டார்.
ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தூண்டியமை உட்பட மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2023 மே மாதம் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோமஸ் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து 2023 மே 23ஆம் திகதியிலிருந்து தற்காலிக தடைக்குள்ளானார். இப்போது அவர் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதால் தற்காலிக தடை விதிக்கப்பட்ட அதே தினத்திலிருந்து அவருக்கான 5 வருட தடை ஆரம்பமாகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் தடுப்பு விதிகளில் நான்கை மீறியதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளில் ஒன்றை மீறியதாகவும் கரிபியன் பிறீமியர் லீக்கின் ஊழல் தடுப்பு விதிகளில் இரண்டை மீறியதாகவும் டெவன் தோமஸ் ஒப்புக்கொண்டார். இந்த ஏழு மீறல்களையும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தவையாகும்.
34 வயதான தோமஸ் அதிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிளிலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்காக 2009 முதல் 2022வரை விளையாடியுள்ளார். அவர் 21 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 12 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியிருந்தார். கடைசியாக அவர் லீவார்ட் தீவுகளுக்காக 2023 மார்ச் மாதம் விளையாடியிருந்தார்.