மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது.
இவ் வருட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 2ஆவது நேரடி வெற்றி இதுவாகும்.
இதேவேளை, இந்தப் போட்டியில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய தீப்தி ஷர்மா தனது 89ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த முதலாவது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை தீப்தி ஷர்மா படைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் (2) ஆட்டமிழந்தார்.
ஆனால், முன்னாள் அணித் தலைவி ஸ்டெபானி டெய்லருடன் ஜோடி சேர்ந்த ஷெமெய்ன் கெம்பெல் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையை அடைய உதவினர். ஆனால், இருவரும் 14ஆவது ஓவரில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
ஷேர்மெய்ன் கெம்பல் 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் ஸ்டெபானி டெய்லர் 42 ஒட்டங்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து சினெல் ஹென்றி (2) ஆட்டமிழந்தார். (79 – 4 விக்.)
தொடர்ந்து செடீன் நேஷன் (21 ஆ.இ.), ஷபிக்கா கஜ்னாபி (15) ஆகிய இருவரும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி மேற்கிந்தியத் தீவுகள் 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
119 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
உபாதையிலிருந்து பூரண குணமடைந்து இந்திய அணியில் மிண்டும் இணைந்த அதிரடி ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜெமிமா ரொட்றிகஸ் 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.
மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷஃபாலி வர்மா 28 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (43 – 3 விக்.)
தொடர்ந்து அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (33), ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிப்பதற்கு இந்தியாவுக்கு உதவினர்.
ஹார்மன்ப்ரீத் கோர் ஆட்டமிழந்த பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 4 ஓட்டங்களை ரிச்சா கோஷ் பெற்றுக்கொடுத்தார்.
ரிச்சா கோஷ் 32 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ஒட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கரிஷ்மா ராம்ஹாரக் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இலங்கை மத்தியஸ்தர்
இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டியில் இலங்கையின் மிச்செல் பெரெய்ரா பொது மத்தியஸ்தராகக் கடமையாற்றினார். நிர்மலி பெரேரா பதில் மத்தியஸ்தராகப் பெயரிடப்பட்டிருந்தார்.