இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். இதேபோன்று தெரிவு செய்யப்பட்ட மலையக கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்திருந்தார். வடக்கு, கிழக்கிலிருந்து சந்தித்த கட்சிகளின் பிரதிநிதிகள் போன்று மலையக கட்சிகளின் தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கவில்லை.
நாங்கள் சந்தித்தோம் என்பதுடன் நிறுத்திக் கொண்டனர். ஏனெனில், அவர்கள் கட்சிகளாகப் பிரிந்திருந்தாலும்கூட இந்தியத் தலைவரை சந்திப்பதில் அவர்களுக்குள் பதற்றம் இல்லை. ஆனால், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போரின் பிரச்னையோ வேறு. அதாவது, தங்களில் யார் விடயங்களை சரியாக வலியுறுத்தினோம் என்பதில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையே போட்டி உண்டு. அந்தப் போட்டியின் விளைவாகவே தனியான ஊடக சந்திப்புகள் நடக்கின்றன.
உண்மையில், என்ன செய்திருக்க வேண்டும் – சந்திப்பில் பங்குகொண்ட அனைத்து பிரதிநிதிகளும் இணைந்து ஓர் ஊடக சந்திப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. அடிப்படையில் இது ஒரு குறியீட்டு ரீதியான பெறுமதி கொண்ட சந்திப்பாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கை வரலாற்று வாழ்விடமாகக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகள், இதேபோன்று இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்களின் பிரச்னைகள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்பதே இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா அரசாங்கத்துக்கு உணர்த்த முற்படும் செய்தியாகும்.
இந்திய பிரதமரிடம் தாங்கள் என்ன பேசினோம் என்பதைப் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் பங்குகொண்டவர்கள் உடனடியாக ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அதிலும் சந்திப்பில் பங்கு கொண்ட தமிழ் அரசு கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஊடக சந்திப்பில் பங்குகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து ஒற்றையாட்சிக்குள் தீர்வின் சாத்தியமின்மையை தான் வலியுறுத்தினார் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) கட்சியின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
சந்திப்பில் பங்குகொண்டவர்களில் அவர் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்னையை உறுதியாக இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தாரென அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுவதை காண முடிகிறது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியிலிருந்து பங்கொண்டவர்கள் தாங்கள் பேசியதைக் கூறவில்லை. சந்திப்பில் பங்குகொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துவரும் கருத்துகள் எதனைக் காண்பிக்கின்றது? இந்தியப் பிரதமரை சந்திக்கும்போதும் தெருக்களில் சண்டையிடும் கட்சி மனோபாவத்துடன்தான் சந்தித்திருக்கின்றனர் – இதுதான் தமிழ் கட்சிகளின் நிலைமை என்றால், இவ்வாறான கட்சிகளை நம்பி ஒரு பிராந்திய சக்தி எவ்வாறு அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முடியும்?
தாங்கள் பிரதமரிடம் குறிப்பிட்டதை மக்களுக்குக் கூறிவரும் தமிழ் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளுக்கு பிரதமர் மோடி வழங்கிய பதிலை எங்குமே கூறவில்லை. உண்மையில், அவர் என்ன பதிலளித்தார். தமிழ் மக்களின் பிரச்னைக்கு சமஷ்டி தீர்வு மிகவும் சிறந்தது. அதனை தனது அரசாங்கம் நிச்சயம் கொழும்பிடம் வலியுறுத்துமென்று கூறினாரா? மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் அவர் என்ன கூறினார்? ஏனெனில், தங்களில் யார் சரியாகப் பேசினார்கள் என்பதில் முட்டி மோதிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடி தங்களுக்கு என்ன சொன்னார் என்பதையுமல்லவா மக்களுக்குச் சொல்ல வேண்டும். புதுடில்லிக்கு அழைக்குமாறு கோரியதாகவும் ஒரு கட்சியின் பிரதிநிதி கூறுகிறார் – அவ்வாறாயின் அதற்கு மோடி வழங்கிய பதில் என்ன? இந்திய பிரதமரின் கரிசனை என்ன என்பதையும் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?