யார் அந்த மூன்றாம் தரப்பு?

0
236

தமிழ் தேசியக் கட்சிகள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையொன்று தொடர்பில் ஆராய்ந்துவருகின்ற சூழலில்தான், இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை.
ஒருவேளை காங்கிரஸ் கலந்துகொண்டாலும் கூட, உருப்படியான பங்களிப்புக்களை வழங்குமாவென்பது கேள்விக்குறிதான்.
எவ்வாறெனினும், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் கலந்துரையாடியிருப்பது வரவேற்கவேண்டியதொரு விடயமாகும்.
கொழும்பை எதிர்கொள்ளும் நோக்கில், தமிழ்க் கட்சிகள் தங்களை ஓர் அணியாக்கிக்கொள்வதும், தமிழர்கள் ஒரு தரப்பென்பதை அடையாளப்படுத்துவதும் முக்கியமானது.
இந்த விடயத்தை ஈழநாடு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பயணிக்க வேண்டும்.
தங்களுடைய சொந்த கட்சி நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவதை முற்றிலுமாக கைவிடவேண்டும்.
இந்த சந்திப்பின்போது மூன்றாம் தரப்பின் பங்களிப்பு தொடர்பிலும் பேசப்பட்டிருக்கின்றது.
இலங்கைத் தீவின் இனப்பிரச்னை வரலாற்றில், மூன்றாம் தரப்பின் தலையீடுகள் புதிய விடயமல்ல.
இரண்டு தடவைகள் மூன்றாம் தரப்பின் தலையீடுகள் நிகழ்ந்திருக்கின்றன.
முதலாவது இந்தியாவின் தலையீடு.
இரண்டாவது, நோர்வேயின் ஊடான மேற்குலக தலையீடு.
மேற்படி இரண்டு தலையீடுகளின் போதும், தமிழர்களின் அரசியல் ஆயுதபலத்தை கொண்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, நோர்வேயின் தலையீடு முடிவுக்குவந்தது.
ஆனால் இந்தியாவின் தலையீடு அப்படியல்ல.
அது இப்போதும் எப்போதும் நிலைத்துநிற்கக் கூடிய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை கொண்டிருக்கின்றது.
இன்றும் இந்தியா அந்த ஒப்பந்த அடிப்படையில்தான், இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் அபிப்பிராயங்களை கூறிவருகின்றது.
அபிப்பிராயங்களை கூறுவதற்கான சட்ட உரித்தை குறித்த ஒப்பந்தம் வழங்கியிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியப் படைகளுடன் இராணுவ ரீதியாக மோதியதைத் தொடர்ந்து, இந்தியா, ஈழத் தமிழர் விடயத்தில் தலையிடுவதை முற்றிலுமாக தவிர்த்திருந்தது.
அதன் பின்னர், இந்தியாவை அணுகும்போது மட்டுமே, இந்தியா அபிப்பிராயங்களை கூறியிருக்கின்றது.
இந்த அடிப்படையில் நோக்கினால், 1990 – 2009 வரையில், இந்தியா பிரத்தியேகமாக எந்தவொரு ஈடுபாட்டையும் காண்பித்திருக்கவில்லை.
நோர்வேயின் தலையீட்டுக் காலத்திலும் இந்தியா பார்வையாளராக மட்டுமே இருந்தது.
ஆனால் இந்தியாவின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது, அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால், நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்துவிடும் என்பதை துல்லியமாக மதிப்பிட்டே, நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஒவ்வொரு விடயங்களையும் இந்தியாவிற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்.
இலங்கை விவகாரம் ஒரு சிக்கலான பிரச்னை, இதற்குள் ஒரு கட்டத்திற்கு மேல், நோர்வேயினால் பங்களிப்பை வழங்க முடியாதென்னும் அப்பிராயத்தையே இந்தியா கொண்டிருந்தது.
மார்க் செல்டர் எழுதிய, ‘ஒரு உள்நாட்டு யுத்தத்தின் முடிவுக்கு’ என்னும் நூலில் இந்த விடயங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
இந்த பின்புலத்தில் நோக்கினால், இந்தியாவை தவிர்த்து எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீடு செய்தாலும் கூட, அதனால் எந்தவொரு நன்மையும் கிடக்கப்போவதில்லை.
இதுவரையான வரலாற்று அனுபவம் நமக்கு இதனையே உணர்த்துகின்றது.
இந்த பின்புலத்தில் நோக்கினால், மூன்றாம்தரப்பு என்னும் பேச்சு வந்தால் தமிழர்களின் தெரிவு இந்தியாதான்.
ஒரு வேளை, இந்தியாவிற்கு சில சங்கடங்கள் இருப்பின், இந்தியாவின் பரிந்துரையில் பிறிதொரு தரப்பை அணுகலாம்.
அவ்வாறில்லாது, இந்தியாவை தவிர்த்துவிட்டு செல்ல முற்பட்டால், ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் நகராது.
நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் கூட, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவை முறையாக அணுகியதற்கு சான்றுகள் இல்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், நிலைமைகள் கையை மீறிச் செல்வதை உணர்ந்த அன்ரன் பாலசிங்கம், 2006இல், என்.டி ரிவி என்னும் இந்திய
தொலைக்காட்சிக்கு நேர்காணலொன்றை வழங்கியதன் மூலம், இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார்.
அந்த நேர்காணலில் விடுதலைப் புலிகளின் தவறுகளுக்கு பாலசிங்கம் மன்னிப்பு கோரியிருந்தார்.
ஆனால் அப்போது நிலைமைகள் அதிகம் மாற்றமடைந்திருந்தது.
எனவே இந்த அனுபவங்களிலிருந்து சிந்தித்தால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டுக்கான தேவையேற்படுமாக இருந்தால், தமிழ் தேசியக் கட்சிகள் இந்தியாவிற்கு பகிரங்கமான அழைப்பை விடுக்கவேண்டும்.
இந்தியாவின் மத்தியஸ்தத்தை கோரவேண்டும்.