யாழில் தொழில் தேடுவோர் மற்றும் சுயதொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கான அறிவிப்பு

0
235

யாழ்ப்பாணத்தில் தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் ஆரம்பிக்க விரும்புபவர்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகமானது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பவர்களைப் பதிவு செய்யவிருக்கின்றது.
இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளூடாகவும் இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
பெற்றுக்கொள்ளும் விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்தி எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பதாக, கிராம சேவையாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுகள் தொடர்பான மேலதிக விபரங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படுமிடத்து 021- 2219359 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, தொழில் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.