யாழில் 15 வயது சிறுமி கூட்டாக வன்புணர்வு!

0
261

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது பானத்தை பருக்கி அவரை கூட்டாக வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பொலிஸார் சேர்ப்பிப்பதற்குப் பதிலாக அவரின் தாயாரையே சேர்ப்பிக்குமாறு அனுப்பியுள்ளனர். நேற்றிரவு 8 மணி வரை சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

நேற்றைய தினம் குறித்த சிறுமிக்கு மது பானத்தை வலுக்கட்டாயமாகப் பருக்கிய ஒருவர் அவரை வன்புணர்ந்தார் என்றும் பின்னர் அந்தச் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸாரே மருத்துவமனையில் சேர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சிறுமியின் தாயாரிடம் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்றிரவு 8 மணி வரை யாழ். போதனா மருத்துவமனையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலோ அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இதுபற்றி அறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாணப் பணிமனை சிறுமியை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துமவனையில் அனுமதிக்குமாறு அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது.