யாழ்ப்பாணம் வடமராட்சியில் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையம் குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெற்றோல் விநியோகம் கியூஆர் அடிப்படையில் வழங்கப்பட்டது. நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருநாட்களாக நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மாலை 5 மணி வரை பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. எனினும் பல நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றோல் முடிவடைந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேவேளை உடுப்பிட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடைய குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 3 ஆயிரம் வரையான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் காத்திருந்த நிலையில் பெற்றோல் நிறைவடைந்ததும் இரவு 10.00 மணியளவில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் பெற்றோல் நிரப்பப்படும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்கான பணத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாதன் காரணமாக நேற்றைய தினம் அங்கு பெற்றோல் விநியோகம் இடம் பெறவில்லை. ஆனால் அங்கு பல நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள் நீண்ட வரிசையில் அடுக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நெல்லியடி மற்றும் குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் வழங்கிய நிலையில் இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் கியூ.ஆர் பரிசோதிக்கும் கடமையில் ஈடுபட்டனர். மேலும் மதகுருமார் விசேட தேவையுடையோர் திடீர் மரண விசாரணை அதிகாரி உட்பட பலருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டது. இதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 3 நாட்களாக வரிசையில் டீசல் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.