யாழ். பல்கலை உபவேந்தருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

0
16

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிறிசற்குணராசாஇ கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.தமக்கு எதிராகப் பிரதிவாதிகளால் விதிக்கப்பட்ட வகுப்புத்தடையை சவாலுக்கு உட்படுத்திக் குறித்த மாணவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய தமக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சில கோரிக்கைகளை முன்வைத்துத் தாம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

பின்னர் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் வகுப்பு புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தது. இதனையடுத்து இடம்பெற்ற பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தில் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.இந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மாணவனுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.