அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை முறியடிக்க, முதலீட்டுத் திட்டங்களுக்கு, டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர்
புடின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22 மற்றும் 23ம் திகதிகளில் 16வது பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, ரஸ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முதலீட்டு திட்டங்களுக்கு நிதியளிப்பதில், தேசிய டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக பிரிக்ஸ் நாணயத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பானது டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகின்றது.
இதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து ரஷ்யா செயற்பட்டு வருகின்றது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக புதிய ரிசர்வ் நாணயத்தை உருவாக்குதில் எச்சரிக்கையான அணுகுமுறை அவசியமாகும்.
இந்த நாடுகள் தேசிய நாணயங்களின் பயன்பாடு, புதிய நிதி கருவிகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.