யுக்ரைனில் போரிடுவதற்காக ரஷ்யாவின் வாக்னர் (WAGNER) கூலிப்படை குழு 48,000க்கும் மேற்பட்ட கைதிகளை அனுப்பியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கொலை போன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போர் புரியச் செல்வதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பிப்பதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரிய தண்டனை பெற்ற ஏராளமானவர்கள் யுக்ரைனில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் போரில் இணையும்போது அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
போர் முனையிலிருந்து தாயகம் திரும்பும் ரஷ்யச் சிப்பாய்கள் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ரஷ்ய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் அவர்களைத் தியாகிகள் எனத் தெரிவிக்கின்றன.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் அவர்கள் ரஷ்யாவின் விசேடமானவர்கள் எனப் பாராட்டி வருகிறார் எனவும் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வாக்னர் கூலிப்படையின் தலைவர் கடந்த வருடம் கொல்லப்பட்டதன் பின்னர் ரஷ்யச் சிறைகளிலிருந்து யுத்தத்திற்காக ஆட்சேர்ப்பு பணிகளை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.அதேவேளை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் கூட யுத்தமுனையிலிருந்து நாடு திரும்பும் ரஷ்யக் கைதிகளின் நடவடிக்கைகளால் ரஷ்யாவின் குற்ற விகிதாசாரம் அதிகரித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளது.