யுவான் வாங் கப்பல் விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகியன அழுத்தம்

0
157

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது. யுவான் வாங் 05 கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யுவான் வாங் 05 கண்காணிப்பு கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சீனாவின் யுவான் வாங்-05 கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வழங்கினார். தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முயற்சிப்பது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும்.
யுவான் வாங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்விரு நாடுகளின் தேவைகளுக்காக இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக் கொள்ள முடியாது. இலங்கையின் வெளிவிவகார கொள்கை நடுநிலையாக பேணப்பட வேண்டும். யுவான் வாங் -05 கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீன கப்பல் உளவு பார்ப்பதற்காகவே அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். சீனாவின் கப்பல் இந்தியாவை உளவு பார்ப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தராமல் கடற்பரப்பில் இருந்தவாறே இந்தியாவை உளவு பார்க்க முடியும். ஆகவே இந்த கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.