அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னைநாள் செயலாளர், முன்னைநாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், பனிப்போர் கால அமெரிக்க வெற்றியின் சொந்தக்காரராகப் போற்றப்படும் ஹென்றி கிசிங்கர் (Henry
Kissinger) அவரது நூறாவது வயதில் காலமாகியிருக்கின்றார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் தனித்துவமான இராஜதந்திரியாக நோக்கப்படும் கிசிங்கர் 1970களில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் இன்னொரு
பெயராக அறியப்பட்டவர்.
அப்போதைய ஜனாதிபதி நிக்சனுக்கு அடுத்த படியான அதிகாரம் மிக்கவராக இருந்தவர்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஜோன் எவ். கென்னடி காலத்திலிருந்து தற்போதைய ஜனாதிபதி பைடன் வரை 12 ஜனாதிபதிகளுக்கு ஆலோசனை
வழங்கியவர்.
ஆனால், இவ்வாறான வரலாற்றைக் கொண்டிருக்கும் கிசிங்கர் அமெரிக்காவுக்குள் ஓர் அகதியாக அடைக்கலம் புகுந்தவர்.
நாசி ஜேர்மனியின் யூதர்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து தப்பியவர்.
தான் அடைக்கலம் தேடிய நாட்டின் நலன்களை பேணிப் பாதுகாப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
ஜேர்மனியின் நாசி வதை முகாம்களிலிருந்து தப்பிய யூதர்கள் உலகெங்கும் சிதறி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.
இவ்வாறானதொரு சூழலில் மீண்டெழ முயற்சித்த யூதர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தனர்.
அதாவது, தாங்கள் ஒரு பலமான சமூகமாக எழுச்சியுற வேண்டுமாயின் அதற்கு ஒரு பலமான நண்பரின் ஆதரவு எப்போதும் கட்டாயமானது.
தனித்து இவ்வுலகில் தாம் வாழ முடியாது. இந்த புரிதலின் அடிப்படையில் இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட உலக ஒழுங்கில் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை தழுவிக் கொண்டனர்.
தங்களின் ஆற்றலால் அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்குள் தவிர்க்கவே முடியாதவர்களாகத் தங்களை நிலைப்படுத்தினர்.
அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் யூத ‘லொபி’ என்று குறிப்பிடுமளவுக்கு அவர்களின் செல்வாக்கு இருக்கின்றது.
இஸ்ரேலுக்கு ஒரு நெருக்கடி எனின், அங்கு அமெரிக்கா நிற்கும்.
அத்தோடு ஒட்டுமொத்த மேற்குலகமும் நிற்கும்.
உலக அரசியலைப் புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப எடுக்க வேண்டிய தீர்மானத்தை சரியாக எடுத்து பலமான ஒரு நண்பரை வெற்றிகொண்டதன்
காரணமாகவே யூதர்களால் இன்று நிமிர்ந்து நிற்க முடிகின்றது.
ஈழத் தமிழ் சூழலிலும், யூத கனவு இருந்தது – ஆனால், கனவிருந்த அளவுக்கு உலக அரசியலை புரிந்து கொண்டு சரியான முடிவுகளை மேற்கொள்ளும் ஆற்றல் வெளிப்படவில்லை.
பனிப் போர் காலத்தில்தான் இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது.
உண்மையில், அப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் தவறான வெளிவிவகார கொள்கையின் விளைவாகவே இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்தது.
இந்தியாவின் அன்றைய இலங்கை தொடர்பான கொள்கையின் ஆணிவேராக ஈழத் தமிழர்களே இருந்தனர்.
ஆனால், அதனை கையாளுவதற்கு அப்போதிருந்த தலைமைகளால் இயலவில்லை.
முக்கியமாக பிரபாகரன் – பாலசிங்கம் அணி பனிப் போர் காலத்தின் அரசியலை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படத் தவறியது.
தேவையில்லாது இந்தியாவை விரோதித்துக் கொண்டது.
இதன் விளைவாக ஈழத் தமிழ் சமூகம் ஒரு பலமான நண்பனை இழந்து போனது.
இறுதியில் முக்கால் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றை கொண்டிருந்த போதிலும் அரசியல் தீர்வு முயற்சியில் எவ்வித முன்னேற்றத்தையும் அடைய முடியாத கையறு நிலையில் இருக்கின்றது.
இருப்பதையும் இழந்து – எஞ்சியிருப்பதையும் பாதுகாக்க முடியாதவர்களாக ஈழத் தமிழ் தலைமைகள் என்போர் இருக்கின்றனர்.
அருகிலிருக்கும் பலமான நாட்டை விரோதித்துக் கொண்டு தனிவழியில் செல்ல முற்பட்டதன் விளைவையே இன்றைய தமிழ் தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
யூதர்களின் பலமான நண்பன் கோட்பாட்டிலிருந்து ஈழத் தமிழர் அரசியல் சமூகம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை.
இனியாவது கற்றுக்கொள்ள முயற்சித்தால் இருப்பதையாவது பாதுகாக்கலாம்.