ரணிலின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம்! : ஜோசப் ஸ்டாலின்

0
72

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு நாம் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். நிதி அமைச்சில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்பட்டபோது அதிகாரிகள் மாத்திரமே கலந்துகொள்கிறார்கள்.
அவர்களால் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் அசமந்தப் போக்குக்கு எதிராக நாம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தோம். எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் மறுநாளும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தோம்.நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஸ்தம்பிக்கச் செய்து நாம் எமது பலத்தைக் காட்டியுள்ளோம்.

அதிபர், ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்.எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொழிற்சங்க ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்போம்.