அண்மையில் ரணில் விக்கிரமசிங்க இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்கியிருந்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷவால் தடை விதிக்கப்பட்ட அமைப்புகளுக்கே, ரணில் வெள்ளையடித்
திருக்கின்றார்.
இதேபோன்றே கோட்டாபயவால் தடை விதிக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையையும் நீக்கியிருந்தார்.
2015இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், பயங்கரவாதிகளென்று கூறி, சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது தடை விதித்தது.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பெயரிலேயே அனைத்தும் நடைபெற்றன.
அவ்வாறான அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகள் பின்னர், மைத்திரிபால சிறிசேன – ரணில் ஆட்சியில் நீக்கப்பட்டன.
முன்னர் பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டவர்கள் எவ்வாறு திடீரென்று நல்லவர்களானார்கள் என்பதற்கு அரசாங்கம் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
அவர்களை பயங்கரவாதிகளென்று கூறியதற்கு எவ்வாறு எந்தவோர் ஆதாரபூர்வமான விளக்கங்களையும் அரசாங்கம் வழங்கவில்லையோ அதேபோன்றுதான், அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பிலும் அரசாங்கம் எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தடை நீக்கப்பட்ட அனைவரும், 2019இல், கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து மீண்டும் பயங்கரவாதிகளானார்கள்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அதுவரையில் தமிழர்கள் மீது மட்டுமே பயங்கரவாத முத்திரை குத்திக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மீது திரும்பின.
தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகள் சிலவற்றின்மீது தடை விதிக்கப்பட்டது.
இப்போது அந்தத் தடையையே ரணில் நீக்கியிருக்கின்றார்.
முன்னர் இஸ்லாமிய பயங்கரவாதிகளாக தெரிந்தவர்கள், இப்போது எவ்வாறு நல்லவர்களானார்கள் என்பதற்கு விளக்கமில்லை.
தனது தேர்தல் நலனை இலக்காகக் கொண்டுதான் ரணில் இந்த நகர்வை மேற்கொள்கின்றாரா? அது உண்மையாயின், இதனை முஸ்லிம் மக்களால் புரிந்துகொள்ள முடியாதா? உண்மையில், பயங்கரவாதம் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் புரிதல் கொள்கைவழியாக நோக்கப்படுவதில்லை.
வெறுமனே தங்களின் சுயநல அரசியல் காரணங்களிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றது.
ஒருவரை அல்லது ஓர் அமைப்பை பயங்கரவாதியென்று பட்டியலிடும்போது, அவர்களது செயல்பாடுகள் தொடர்பாக ஆதாரபூர்வமான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்.
ஆனால், சிங்கள ஆட்சியாளர்களோ, காலத்திற்கு காலம் தங்களின் தேவைகளிலிருந்து தடைகளை போடுகின்றனர் பின்னர், அதேதடைகளை மற்றைய ஆட்சியாளர் நீக்குகின்றார்.
ராஜபக்ஷக்களை பொறுத்தவரையில் அவர்களது நலன்களுக்கு இவ்வாறான தடைகள் தேவைப்பட்டன.
முக்கியமாக, புலிகள் மீதான யுத்த வெற்றிவாதம் அவர்களது குடும்ப அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பதற்கு தேவைப்பட்டது.
தங்களது மோசமான குடும்ப அதிகார துஸ்பிரயோகங்களையும், நாட்டை சீரழிக்கும் அணுகுமுறைகளையும் மறைப்பதற்கு, புலிகள் மீதான வெற்றிவாதம் அவர்களுக்கு தேவைப்பட்டது.
இந்த பின்புலத்தில்தான், தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை அவர்களுக்கு தேவைப்பட்டது.
ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அனைத்து அமைப்புகளுமே, தாராளவாத மேற்குலக நாடுகளில் இயங்கிவரும் அமைப்புகளாகும்.
இப்போதும் ரணில் அரசாங்கம் – நாடு கடந்த அரசாங்கம் எனப்படும், தமிழ் புலம்பெயர் அமைப்பின்மீதான தடையை நீடித்துவருகின்றது.
ஆனால், இந்த அமைப்பின் பிரதமராக அடையாளப்படுத்தப்படுபவரோ, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவருகின்றார்.
அவ்வாறாயின் மேற்குலக நாடுகள் பயங்ரவாதத்துக்கு உறுதுணையாகவா செயல்படுகின்றன? அமைப்புகள் மீதான தடையை நீக்குவதுதான் ரணிலின் கொள்கை நிலைப்பாடென்றால், அனைவரின்மீதான தடையையையும் நீக்க வேண்டும்.
தமிழீழம் என்பது ஒரு ஜனநாயக நிலைப்பாடு என்றால், அதனை முன்வைத்து, சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
வன்முறை அரசியலை மட்டுமே ஓர் அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்.