ரணிலின் நகர்வுகள் வெற்றி பெறுகின்றனவா?

0
172

சர்வதேச நாணய நிதியத்துடனான முதல்கட்ட நகர்வுகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
அடுத்துவரும் 48 மாதங்களுக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடனுதவியை வழங்குவதற்கான இணக்கப்பாடு வெற்றியளித்திருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து நாடு ஒரு புதிய பொருளாதார சகாப்தத்திற்குள் பிரவேசிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் வங்குரோத்துநிலை மற்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல எதிர்காலத்தில் நாடு மேலும் சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்னடைவை சந்திக்காத வகையிலான முன்னேற்றங்களை நோக்கி நாடு நகருமென்றும் ரணில் தெரிவித்திருக்கின்றார்.
சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களில் ஏற்பட்ட இழுபறி நிலைக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைப்பது தாமதமாகலாம் – என்னும் சந்தேகங்களுக்கு மத்தியில்தான், தற்போது நாணய நிதியத்துடனான முதல்கட்ட நகர்வுகள் வெற்றியளித்திருக்கின்றன.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மட்டுமல்ல ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவுவதை ஊக்குவிப்பதாக சீனா தெரிவித்திருக்கின்றது.
சீனாவுக்கும் சில நெருக்கடிகள் உண்டு.
இதனை சீனா உணர்ந்திருப்பதாகத் தெரிகின்றது.
அதாவது, சீனா விடயங்களை தடுப்பதான அபிப்பிராயங்கள் தென்னிலங்கையில் பரவுவது சீனாவுக்கு சிக்கலானது.
அத்துடன், பொருளாதார நெருக்கடியில் நாடு விழுந்தவுடன் சீனா உடனடியாக உதவி செய்யவில்லை. ஆனால், இந்தியா உடனடியாக உதவிசெய்தது.
இந்தியாவின் உடனடி உதவிகள் இல்லாவிட்டால் நாடு பெரும் கொந்தளிப்புக்குள் சிக்கியிருக்கும். மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும்.
இதன் காரணமாகவே, இந்தியாதான் தங்களுக்கு உயிர்மூச்சளித்தாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்டுச் செல்லுமாறு கொழும்பை இந்தியா தொடர்ந்தும் ஊக்குவித்து வந்தது.
ஆனால், சீனா கடன் மறுசீரமைப்புக்கு பின்னடித்ததன் மூலம் நாணய நிதியத்தை நோக்கிச் செல்வதை மறைமுகமாகத் தடுத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், சீனாவுக்கு எதிரான சிந்தனைகள் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் வலுவடைந்து விடலாம் என்னும் ஆபத்தையும் சீனா கருத்தில் கொண்டிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில்தான் பௌத்த மதபீடங்களுக்கு உதவுவதற்கு சீனா முன்வந்திருக்கின்றது.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருக்கின்றார்.
அவரின் வெற்றியானது ரணில் தொடர்பில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களை பலப்படுத்தியிருக்கின்றது. அதேவேளை ரணில் எதிர்ப்பை வெளியிட்டு வருபவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ரணில் விடயங்களைக் கையாளக் கூடியவர் என்னும் அபிப்பிராயம் மேலும் பலமாகியிருக்கிறது.
‘வெறுமனே உதட்டளவில் விடயங்களை முன்வைத்துக் கொண்டிருக்க முடியாது – 75ஆவது சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியடையும் இந்தசந்தர்ப்பத்தில் அடுத்துவரும் 25 ஆண்டுகளில் முன்னோக்கி நகர்வதற்கான அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும்’ – இவ்வாறு கூறும் ரணில், முன்னர் தோற்றுப்போன இடத்திலிருந்து தனது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றாரா என்னும் கேள்வியும் எழுகின்றது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும் கூறிவிட முடியாது.
ஆனால், 75ஆவது சுதந்திர தினத்தை எண்ணிப் பார்க்கும்போது, கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்களின் ஆகக் குறைந்த கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றுவதற்கு கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கம் முன்வரவில்லை – ஆகக்குறைந்தது அது தொடர்பில் சிந்திக்கக்கூடிய நிலையில்கூட இல்லையென்பதுதான் கசப்பான உண்மை.
இது தொடர்பில் ரணில் சிந்திப்பாரா? ஒருவேளை ரணில் சிந்தித்தால்கூட அதனை நடைமுறைப்படுத்த அவரால் முடியுமா என்பது அடுத்த கேள்வி.