ரணில் அரசின் அமைச்சரவையால் 07 பில்லியன் ரூபா நட்டம்

0
26
Ranil Wickremesinghe, Sri Lanka's president, during an interview at the Presidential Secretariat in Colombo, Sri Lanka, on Friday, Sept. 20, 2024. Sri Lanka's president said reopening talks with the International Monetary Fund over a bailout program would represent the biggest threat to the island nation's economy, hitting back at his opponents who have pledged fresh dialogue with the lender. Photographer: Thilina Kaluthotage/Bloomberg via Getty Images

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடை மையாக்குவதற்கு ஏதேனும் சட்ட ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை செய்யவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 ‘‘ஒரு வருடத்தில் 250-300 வரையான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தினூடாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தினூடாக கிடைக்கும் ஓய்வூதிய வாழ்க்கையை முன்னெடுக்கும் நபரொருவர் இவ்வாறு பயபக்தியுடனான கருத்துகளை முன்வைப்பது பொருத்தமானதாக இருக்காது.

மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் இல்லை. அவ்வாறு அனுமதிப்பத்திரங்களை வழங்கி அந்த மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை அறவிடுவதற்கு ரணில் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள், அலோசியஸ் உள்ளிட்ட குழுக்கள் மக்கள் செலுத்திய வரியை மதுவரித் திணைக்களத்தினூடாக திறைசேரிக்கு முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை.

அலோசியஸூக்கு சொந்தமான நிறுவனங்களின் நிலுவை வரி 2022ஆம் ஆண்டிலிருந்து செலுத்தப்படாமல் இருக்கிறது. எனவே, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி தீர்மானம் எடுத்தபோது தமக்கு நெருங்கிய நண்பர்கள் செலுத்தாமலிருந்த வரிப்பணத்தையும் சேகரிப்பதற்கும் தீர்மானம் எடுத்திருக்கலாம்.

அதேபோன்று, அவரின் அமைச்சரவையில் இருந்தவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவேண்டிய வரிப்பணம் மாத்திரம் 07 பில்லியன் ரூபா வரையில் நிலுவையில் இருக்கிறது. எனவே, அந்த நிலுவை வரிப்பணத்தை வசூலிக்கவே முயற்சிக்கிறோம்.

தற்போது வரையில் அலோசியஸூக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் சட்டத்தில் இருக்குமாக இருந்தால் அதனை செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால், சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை. அதேபோன்று இரு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலை உருவாக்குவதற்கு எடுத்த காலத்தில் தென்னை மரங்களை உருவாக்கியிருந்தால், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான அக்கறையை நெற்களஞ்சியங்களுக்கு வழங்கியிருந்தால் இன்று இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது’’ என்று சுட்டிக்காட்டினார்.