அறகலய போராட்டத்தை அமெரிக்கா விரும்பியதுபோல் முன்னெடுப்பதை தடுத்தமையால்தான் ரணில் விக்கிரமசிங்க இலக்கு வைக்கப்படுகிறார் என்று கோட்டாபய ஆதரவு அரசியல்வாதி உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.இலங்கையில் எது நடந்தாலும் அதனை சதிக்கோட்பாடுகளோடு தொடர்புபடுத்துவது ஓர் அரசியல் நோயாகவே இருக்கிறது. இதில் சிங்கள அரசியல் சூழல், தமிழ் அரசியல் சூழல் என்னும் பாகுபாடுகள் இல்லை.
வடக்கில் ஓர் அரசியல்வாதி வீதியில் தடுக்கி விழுந்தாலும் அதற்கு பின்னால் வெளியக உளவுச் சதி இருப்பதாகக் கூறுமளவு நிலைமை இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்து ரணில் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டதான பார்வையொன்றை தென்னிலங்கையில் ரணிலின் ஆதரவாளர்கள் கூறமுற்பட்டனர் – அதனை தற்போது கோட்டாபய ஆதரவுத் தரப்பினரும் கூறுகின்றனர்.
ரணில் தன்னுடைய அரசியல் அனுபவத்திலும் வித்துவத்திலும் செருக்குக் கொண்டே அந்த நேர்காணலை எதிர்கொள்ள முற்பட்டார். ஒரு கட்டத்தில் தடுமாறி, ‘நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே அரசியலில் இருக்கிறேன்’, என்றும் கூறுகிறார். ஆனால், நேர் கண்டவர் துறைசார் அனுபவம்மிக்கவர், பல விவாதங்களில் களம் கண்டவர் – இதனால் ரணில் சிக்குப்பட்டு விட்டார். அதிலும், ரணிலின் பக்கத்தில் வாதிடுவதற்கு விடயங்கள் இருக்கவில்லை – காரணம் இலங்கைத்தீவில் ரணிலின் காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ரணில் ஜனாதிபதியாக வந்த பின்னர் மேற்குலக ஊடகங்களில் நேர்காணல்களை வழங்கியிருக்கிறார். இதற்கு முன்னரும் நேர் கண்டவர் மீது கோபப்பட்டு சத்தமிட்டிருக்கிறார். விடயங்களை எதிர்கொள்ள முடியாமல் போகின்றபோது, ‘நீங்கள் பிறப்பதற்கு முன்னரே அரசியலில் இருப்பவர்’, என்று கதைவிடும் பழக்கம் ரணிலிடம் உண்டு. ஆனால், அது இம்முறை எடுபடவில்லை. ரணில் மேற்கு சார்பானவர். குறிப்பாக, அமெரிக்க ஆதரவாளர் என்னும் பார்வை பழையது. அது முன்னரைப் போன்று இப்போதும் பெறுமதியுடையதாக இருப்பதாகக் கூறமுடியாது.
ரணிலின் கருத்துகளும் இப்போது அவ்வாறு இருப்பதாகக் கூறமுடியாது. நல்லாட்சி காலத்தில்தான், ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கியிருந்தார். ரணிலின் இந்தத் தீர்மானம் இந்திய மட்டத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவையும் சங்கடப்படுத்தியது. சீனாவின் கடன் பொறி இராஜதநத்திரத்துக்கான ஒரு குறியீடாகவே அம் பாந்தோட்டை விவகாரத்தை அமெரிக்க ஊடகங்கள் வர்ணித்து வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு முதன்மையான அரசியல்வாதியாக நோக்கப்படும் நிலையில் இல்லை – காரணம் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ரணில் என்னதான் தன்னைப் பற்றிய அரசியல் விம்பத்தை காண்பித்தாலும்கூட, அவரால் சாதாரண சிங்கள மக்களின் ஆதரவை கவர முடியவில்லை. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் தேவை எவருக்கும் இல்லை. தவிர, இலங்கையை மேற்குலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கவுமில்லை. தவிர, ரணிலை நேர்கண்ட ஊடகம் அப்படியொன்றும் அமெரிக்க ஆதரவு ஊடகமும் அல்ல.