பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரதெல்ல மற்றும் கிரேட் வெஸ்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 52 வயதான நானுஓயா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கதிர்வேலு சுப்ரமணியம் என்பவரே மரணித்தாா்.
இன்றைய தினம் பாடசாலை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், அதனை சுத்தம் செய்வதற்கான சிரமாதன பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதில் கலந்து கொள்வதற்காக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே அதிபா் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளாா்.
விபத்தின் பின்னர், ரயிலின் சாரதிகள் அதனை அவதானிக்காது தொடர்ந்து ரயிலை இயக்கியதையடுத்து, ரயில் பாதுகாப்பு பிாிவின் அதிகாரி ஒருவரால் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து அதிபரின் சடலத்தை நானுஓயா ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சடலத்தை அகற்ற நீண்ட நேரம் சென்றமையால் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த விசேட ரயில், சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமானது.
அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலும் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வடகொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.