ஐந்தாவது முறையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள விளாடிமிர் புட்டினுக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர், எதிர்க்கட்சித் தலைவரான நவால்னி உயிரிழப்பு, ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் என புட்டினுக்கு எதிர்ப்பலைகள் எழுந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (15) ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து 03 நாட்கள் வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற நிலையில் நேற்று (18) வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன்.
இதன்படி 87.85 சதவீத வாக்குகளைப் பெற்று புட்டின் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி புட்டின் 5ஆவது முறையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதிக்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹோண்டுராஸ், நிகராகுவா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புட்டினுக்கு இந்தியப் பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
‘‘ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு அன்பான வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்காக எதிர்நோக்கியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.