ரஷ்ய தாக்குதலில் 115 சிறுவர்கள் பலி!

0
170

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் சிக்கி இதுவரை 115 சிறுவர்கள் உயிரிழந்தனர். 140இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மரியூபோல் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 400 பேருக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பாடசாலை ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் அந்தப் பாடசாலை முற்றாக அழிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்வர்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும், மரியூபோல் நகரத்தின்மீது தொடர்ச்சியாக ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றன என்றே அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, போர் தொடங்கியது முதல் ஒரு கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் 30 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ. நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.