ராஜபக்சக்களால் மீண்டெழ முடியுமா?

0
147

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலும் இல்லையென்று கூறுகின்றார்.
ஆனால், எதிர்க்கட்சிகளோ தேர்தலை நடத்துமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.
தேர்தலை நடத்துவதற்கான நிதியில்லை – என்னும் காரணத்தைக் கூறி தேர்தலை பிற்போடுவதற்கே ரணில் முயற்சிப்பார்.
எனினும், அழுத்தங்கள் அதிகரித்தால் ஒரு கட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
இந்த நிலைமைகளை கணித்தே, மகிந்த ராஜபக்ஷ நேரடியாகக் களத்தில் இறங்கியிருக்கின்றார்.
கோட்டாபயவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ராஜபக்ஷக்களின் அரசியல் சாம்ராச்சியம் முடிவுக்கு வந்துவிட்டதான ஒரு பார்வையுண்டு.
இதனை சிலர் சிங்கள தேசியவாதத்தின் வீழ்ச்சி என்று கூறுகின்றனர்.
இன்றைய நிலையில் நோக்கினால் இவ்வாறான கணிப்புக்கள் சரியாகத் தெரியலாம்.
ஆனால், இதனை நிரந்தரம் என்று கருதிவிட முடியாது.
வரலாற்று ரீதியாக நோக்கினால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, அவர்கள் ஒரு விதமான அச்சத்தில் இருக்கின்றனர்.
இதனை பல சிங்கள புத்திஜீவிகளே எழுதியிருக்கின்றனர்.
இந்தியாவுக்கு அருகில் இருப்பது தான் இந்த அச்சத்துக்கான பிரதான காரணமாகும்.
ஏனெனில், ஏழு கோடிக்கு மேற்பட்ட தென்னிந்திய தமிழ் மக்களுடன் தங்களை ஒப்பிடும் போது சிங்களவர்கள் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர்.
இது அவர்களின் வரலாற்று ரீதியான அச்சம்.
இந்தப் பின்னணியிலிருந்துதான் 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட சிங்கள – பௌத்த தேசியவாதிகள் அச்சத்துடன் நோக்குகின்றனர்.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றிலுமான அரசியல் தீர்வாக தமிழ்த் தரப்புக்கள் கருதவில்லை.
அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
ஆனால், 13இல் இருப்பவற்றைக்கூட சிங்களவர்கள் அச்சத்துடன்தான் நோக்குகின்றனர்.
இந்த அச்சம் தொடர்ந்தும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
ஆரம்பத்தில் தமிழர்கள் தொடர்பாக மேலோங்கியிருந்த மேற்படி அச்சமானது, இன்று முஸ்லிம்கள் தொடர்பாகவும் விரிவடைந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில்தான் ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
பொருளாதார வீழ்ச்சியே ராஜபக்ஷக்களின் வீழ்ச்சிக்கான அடிப்படையான காரணம்.
பொருளாதார வீழ்ச்சி என்னும் விடயம் ஏற்படாதிருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வீதியில் இறங்குவதை ஒரு சிங்கள குடிமகனால் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.
ஏனெனில், அந்தளவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ உச்சளவில் சிங்களவர்களால் ஆதரிக்கப்பட்டிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து அதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஒப்பீட்டடிப்படையில்) ஆதரவுத் தளமாக இருந்த சிங்கள மத்தியதர வர்க்கம்கூட, ராஜபக்ஷக்களின் பக்கமாக சென்றனர்.
இந்தப் பின்புலத்தில்தான் தனிச் சிங்கள ஆதரவுடன் கோட்டாபயவால் வெற்றிபெற முடிந்தது.
பொருளாதார நெருக்கடி ராஜபக்ஷக்களை கீழ்நிலைக்கு தள்ளியிருந்தலும்கூட, தங்களால் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமென்றே அவர்கள் கருதுகின்றனர்.
அவர்களால் முடியுமா – என்றால் நிச்சயம் முடியும்.
இங்கு ராஜபக்ஷக்கள் என்பது நபர்களல்ல.
அது ஒரு தென்னிலங்கை சிங்கள – பௌத்த தேசிய குறியீடாகும்.
ராஜபக்ஷக்கள் இல்லாவிட்டால் பிறிதொரு சிங்கள – பௌத்த தேசியவாதி இந்த இடத்தை நிரப்புவார்.
அவர்களுக்கான ஆதரவுத் தளமாக இருப்பது சிங்களவர்கள் மத்தியில் இருக்கும் அச்சம்தான்.
இந்த அச்சம் அதிகரிக்கும்போது, சிங்களவர்கள் நிச்சயம் தங்களின் அச்சத்தைப் போக்கக் கூடிய ஒரு சிங்கள – பௌத்த தலைவரை தேடுவர்.
அது ராஜபக்ஷக்களின் குடும்பத்திலிருந்தும் வரலாம் – அதற்கு வெளியிலும் வரலாம்.
எவர் வந்தாலும் அவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியலானது ராஜபக்ஷக்களின் அரசியலாகவே இருக்கும்.