ராஜபக்சக்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும்!
தற்போதைய அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்குகு அனுப்ப வேண்டும் என்று கூறிய அநுரகுமார திஸநாயக்க, நாட்டு மக்களின் பணத்தை திருடும் ராஜபக்சவினர் நாட்டை விட்டே செல்ல வேண்டும், என்று கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நுகேகொடையில் இன்று புதன்கிழமை நடத்திய எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆரப்பாட்டப் பேரணி இன்று முற்பகல் தெல்கந்தை பகுதியில் ஆரம்பமானது.
74 வருட கால சாபத்துக்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை துரத்துவோம் எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேரணி, ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவௌி கலையரங்கை சென்றடைந்து.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருடர்கள் என குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு உள்ள விடுபாட்டுரிமை காரணமாக வழக்குகளில் இருந்து தப்பிய ஜனாதிபதி தலைமையிலேயே கூட்டம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை கடன் பொறிக்குள் சிக்கவைத்து, நாட்டு மக்களின் சொத்தை கோடிக்கணக்கில் திருடி, குடும்பத்தை வலுவாக்கிக் கொண்ட ராஜபக்சவினர் நாட்டை விட்டுச்செல்ல வேண்டும் என அனுரகுமார வலியுறுத்தினார்.