28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரி20 உலகக் கிண்ண சம்பியனை தீர்மானிக்க இறுதிப் போட்டியில் இந்தியா – தென் ஆபிரிக்கா

க்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்டுவந்த அற்புதமான 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவும் இடையில் பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் அமெரிக்க கண்டத்திலிருந்து விடைபெறவுள்ளது.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் வென்றெடுத்த கிண்ணத்தை 17 வருடங்களின் பின்னர் மீண்டும் சுவீகரிக்க  இந்தியா  முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, அங்குரார்ப்பண அத்தியாயத்தை 2007இல் நடத்திய பெருமைக்குரிய தென் ஆபிரிக்கா 17 வருடங்கள் கழித்து உலக சம்பியன் பட்டத்தை வென்றெடுக்கும் கங்கணத்துடன் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இதற்கு முன்னர் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 7 தடவைகள் அரை இறுதிப் போட்டிகளுடன் துரதிர்ஷ்டத்தால் வெளியேறிய தென் ஆபிரிக்காவுக்கு இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பத்தில் அதிர்ஷ்ட தேவதை கைகொடுப்பாரா என்பது நாளை தெரியவரும்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் குழுநிலையிலும் சுப்பர் 8 இலும் தோல்வி அடையாத அணிகளாக இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் அரை இறுதிகளில் விளையாட தகதிபெற்று இப்போது உலகக் கிண்ணத்தை ஸ்பரிசிப்பதற்கான வாயிலை அண்மித்துள்ளன.

முதல் சுற்றில் இலகுவான ஏ குழுவில் இடம்பெற்ற இந்தியா, தனது முதல் 3 போட்டிகளில் அயர்லாந்தை 8 விக்கெட்களாலும் பாகிஸ்தானை 6 ஓட்டங்களாலும் ஐக்கிய அமெரிக்காவை 7 விக்கெட்களாலும் வெற்றிகொண்டு சுப்பர் 8 வாய்ப்பை இந்தியா உறுதி செய்துகொண்டது. எனினும் கனடாவுடனான கடைசிப் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.

சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை 47 ஓட்டங்களாலும் பங்களாதேஷை 50 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலியாவை 24 ஓட்டங்களாலும்  இந்தியா இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறி அங்கு நடப்பு சம்பியன் இங்கிலாந்தை 68 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் தென் ஆபிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கடும் சவால்களை முறியடிக்க வேண்டியிருந்தது.

டி குழுவில் இலங்கையுடனான ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா, அதன் பின்னர் நெதர்லாந்தை 4 விக்கெட்களாலும் பங்களாதேஷை 4 ஓட்டங்களாலும் நேபாளத்தை கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தாலும் வெற்றிகொண்டது.

சுப்பர் 8 சுற்றிலும் தென் ஆபிரிக்காவுக்கு வெற்றிகள் இலகுவாக வந்துவிடவில்லை.

ஐக்கிய அமெரிக்காவை 18 ஓட்டங்களாலும் இங்கிலாந்தை 7 ஓட்டங்களாலும் மேற்கிந்தியத் தீவுகளை DLS முறைமையில் 3 விக்கெட்களாலும் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அரை இறுதியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை 56 ஓட்டங்களுக்கு சுருட்டிய தென் ஆபரிக்கா 9 விக்கெட்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னெறியது.

இது இவ்வாறிருக்க, பொறுமையும் கட்டுப்பாடும் தங்களது வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்ட இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, மைதானங்களின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொண்டு விளையாடியது எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க வழிவகுத்தது எனவும் கூறினார்.

இதேவேளை கூட்டு முயற்சியே தங்களது வெற்றிக்கு காரணம் எனக் கூறிய தென் ஆபிரிக்க அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், எங்களது முதல் முயற்சியில் சாதிக்க காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles