வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய வடக்கிலும் தெற்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளன.
அம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும் மாத்தறையில் ஒன்றும் மேற்கொள்ளப்படுகின்றன.
அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். 465 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது.
மன்னாரில் ஆறு வீடமைப்புத் திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் நான்கு, கிளிநொச்சியில் நான்கு மற்றும் முல்லைத்தீவில் ஆறு வீடமைப்புத் திட்டங்கள் என வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 24 என கூறப்படுகிறது.