வடக்கு – கிழக்கு விவகாரங்களில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படவேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கலாநிதி மதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் வடக்கு – கிழக்கு தொடர்பான விவகாரங்களை கையாளும்போது பக்கச்சார்பற்ற விதத்தில் அவை கையாளப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று தசாப்த கால போர் இடம்பெற்ற காலத்தில் வாழ்ந்த அந்தப் பிரதேச மக்களது குரல்களுக்கு அரசாங்கமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினரும் உரிய முறையில் செவிசாய்க்கவில்லை என தென்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பௌத்த பிக்குவின் செயற்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்மானிக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரும் அவர் சார்ந்த சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக அவர் அவ்வாறு செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கம் மட்டும் காரணம் அல்ல எனவும் கடந்த கால அரசாங்கங்களும் இந்த பிரச்சினையை கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.