26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு, கிழக்கில் ஜே. வி. பி. ஜே. வி. பி.

தொடர்பில் வடக்கு, கிழக்கில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதான தோற்றம் தெரிகின்றதா? இதுவரையில் தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீ லங்கா சுதந்திர கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவும் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றன. அண்மைக்காலத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன ஆகியவை தங்களுக்கான ஆதரவுத்தளத்தை பெருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

தமிழ் மக்கள் மத்தியில் தென்னிலங்கை கட்சிகள் ஆதரவை பெறுவதற்கு இரண்டு வழிமுறைகளை மேற்கொள்வதுண்டு. ஒன்று நேரடியாக உள்நுழைவது. இரண்டாவது தங்களுடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளுக்குள்ளால் நுழைவது கட்சிகளுக்குள்ளால் நுழைவதுதான் அதிகம். அரசாங்கங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்குள்ளால்தான் அதிகம் இவ்வாறான உள்நுழைவு இடம்பெறுவதுண்டு . இந்த வரிசையில் தற்போது ஜே. வி. பியும் இடம்பிடித்திருக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஜே. வி. பியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீர பேசிக் கொண்டிருக்கும்போது கல்லால் அடிக்கப்பட்டார். காயத்திலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தையும் துடைக்காமல் விஜய வீர பேசிக்கொண்டிருந்தார்.

இன்று நிலைமைகள் வேறு. இன்றைய ஜே. வி. பி. அதிகார அரசியலின் அங்கமாகியிருக்கின்றது. அதிகார அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனை பேணிப்பாதுகாப்பதற்கு பணியாற்ற வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டுவிடும். இந்தப் பின்புலத்தில் ஜே. வி. பியும் தங்களுக்கான தமிழ் ஆதரவுத்தளத்தை பெருக்கிக்கொள்ள முயற்சிக்கும். ஏனைய தென்னிலங்கை கட்சிகளைப்போல், ஜே. வி. பியும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் உத்திகளை கையாளும். குறிப்பாக இளைய தலைமுறையினரே ஜே. வி. பியின் பிரதான இலக்காகும். எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் இருக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் ஒரு விடயமாக எடுப்பதில்லை.

அரசாங்கத்திலுள்ள கட்சிகளை ஆதரித்தால், அவர்கள் மூலம் நன்மை கிடைக்குமென்று மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு நம்புமளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளும் மக்களின் அன்றாட பிரச்னைகளை உற்றுநோக்குவதில்லை. ஆகக் குறைந்தது அந்தப் பிரச்னைகள் தொடர்பில் ஆறுதலாக உரையாடுவதும் இல்லை. தேர்தல் காலத்தில் மட்டும்தான் தமிழ்த் தேசியர்கள் மக்களை சந்திப்பது உண்டு. இதன் காரணமாக மக்கள் கோபமடைந்திருக்கின்றனர். இவ்வாறு கோபமடைந்திருக்கும் மக்கள் தங்களின் கோபத்தை காண்பிப்பதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை நோக்கிச் செல்வது உண்டு. இந்த இடைவெளிகளையே தென்னிலங்கை கட்சிகள் பயன்படுத்திக்கொள்கின்றன.

அநுரவின் வெற்றியைத் தொடர்ந்து, ஜே. வி. பி. அரசாங்கம் அதிரடியாக முன்னெடுத்துவரும் சில விடயங்கள் மக்களை கவர்வனவாகவே இருக்கின்றன. தமிழ் மக்களும் கவரப்படுகின்றனர். இந்தக் கவர்ச்சியை பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் உள்நுழைவது தொடர்பில் ஜே.வி. பி. அதிக அக்கறை காண்பிக்கும். முக்கியமாக தமிழ் இளையோரை இலக்கு வைத்துச் செயல்படும். தமிழ்த் தேசியர்களின் ஆகக் குறைந்தது இளைஞர் கட்சிக் கட்டமைப்புக்கூட இல்லை. பெண்களுக்கான செயல்திட்டங்கள் இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஜே. வி. பி. செல்வாக்கை பெற்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் விழித்துக் கொள்ளாவிட்டால் நிலைமை தலைகீழாகும். தமிழ் அரசியல் கட்சிகள் பலவற்றில் நம்பிக்கைக்குரிய இரண்டாம் தலைமுறை தலைவர்கள் இல்லை. இளைஞர்களை ஆகர்ஷிக்கக்கூடிய ஆளுமைகள் இல்லை. இருப்பவர்களில் அநேகர் ஓய்வூதிய காலத்தையும் அதிகம் தாண்டியவர்கள். இவ்வாறானவர்களைக் கொண்டு புதியதோர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முடியாது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles