இந்திய இழுவைமடிப் மீன்பிடிக்கு எதிரான வடக்கு மீனவர்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானதும் அவசியமானதுமாகும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சி ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
நாளை வடக்கு மீனவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து முன்னெடுக்க இருக்கும் கடல் எல்லையிலான கறுப்புக் கொடி எதிர்ப்புப் போராட்டம் முற்றிலும் நியாயமானதும் அவசியமானதுமாகும் எனவும் தீர்வற்றுள்ள வடபுலத்து மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தியே நாளைய கறுப்புக் கொடிப் போராட்டத்தை கடல் எல்லையியில் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க உள்ளதாகவும் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீன் வளங்களை அள்ளிச் செல்வதையும் மீனவர்களின் வலைகள் வள்ளங்கள் மற்றும் தொழில் உபகரணங்களைச் வெட்டிச் செல்வதும் இந்திய மேலாதிக்கச்
சிந்தனையின் வழிப்பட்டதாகவே நோக்க முடிவதாகவும் இதனால் நாளை வடபுல மீனவ சங்கங்களின் தலைமையில் நடாத்தும் கறுப்புக் கொடி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மாக்சிச லெனினிசக் கட்சி தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.