யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கே.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.
வெள்ளி நிலா விளையாட்டுக் கழக தலைவர் ந.உகனேந்திரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் புதிதாக அமைத்து கொடுக்கப்பட்ட விளையாட்டரங்கு நாடாவெட்டி திறக்கப்பட்டது.
தொடர்ந்து இறுதிப்போட்டியில் கேவில் வொரியஸ் அணியை எதிர்த்து கேவில் சூப்பர் கிங்ஸ் மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வொரியஸ் அணி பன்னிரெண்டு பந்து பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. 134 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கேவில் சுப்பர்கிங்ஸ் அணியினர் பன்னிரெண்டு பந்துமரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது இலக்குகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது
தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வென்ற கேவில் வொரியஸ் அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் இருபதாயிரம் ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது. இறுதியாக கேவில் பிரதேசத்தில் நான்கு வருடங்களாக கடமையாற்றிய முன்னாள் பொருளாதார உத்தியோகத்தர் கௌரவிக்கப்பட்டதுடன் வீரர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்நிகழ்வில் கேவில் கிராம அலுவலர், முள்ளியான் பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.