பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கல்விச்
சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஓய்வுநிலை அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். இந்தப் பகுதியில் ஏற்கனவே பலர் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் அதிகரித்திருக்கின்ற நிலையில் மதுப் பாவனையாளர்களும் இரவு வேளைகளில் அதிகமாக நடமாடும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வன்முறைக் கும்பல்கள் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்திருக்கும் விடயம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் விடயம்தான். வாள்வெட்டு, காதல் விவகாரத்துக்காக ஆட்களை கடத்துதல், தனிப்பட்ட பகைக்காக துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவாகியிருக்கின்றன.
கடந்த காலத்தில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பு தொடர்பான விடயங்கள் பேசுபொருளாக இருந்திருக்கின்றன. இவைகள் எல்லாம் திட்டமிட்டு வெளியாரால் புகுத்தப்பட்ட விடயங்களாகவே நோக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக பல புதிய மதுபான சாலைகள் குறிப்பாக கிளிநொச்சி, மன்னார் பகுதிகளில் திறக்கப்பட்டன. இவைகள் எந்த வெளியாரால் புகுத்தப்பட்டன? இது தொடர்பில் அரசியல் மேடைகளிலும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தங்களின் அரசியலை மேற்கொண்டனர்.
அதிலிருந்து இந்த விடயத்துக்கும் வெளியாருக்கும் ஒரு தொடர்புமில்லை என்பது தெளிவானது. வன்முறைகள் தங்களுக்கு நடக்கும்போது அது ஒரு விடயமாக நோக்கப்படுவதும் மற்றவர்களுக்கு நடக்கும்போது, அது நமக்கு சம்பந்தம் இல்லாத விடயமாக நோக்கப்படுதுண்டு. வடக்கைச் சேர்ந்த அரசியல் மற்றும் சிவில்
சமூகத்தினரும் கடந்த காலங்களில் இந்த அடிப்படையில்தான் இந்த விடயத்தை சாதாரணமாக கடந்து சென்றிருக்கின்றனர்.
அரசியல் விடயங்கள் தொடர்பில் தங்களின் மூக்கை அடிக்கடி நுழைக்கும் சிவில் சமூக அமையங்கள் சமூகம் தொடர்பில் அக்கறையற்றவர்களாவே இருப்பதுண்டு. ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்படும்போது ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. ஆனால், மற்றவர்கள் பாதிக்கப்படும்போது வன்முறைக் கும்பல்களின் செயல்கள் சாதாரணமாக மறக்கப்பட்டு விடுகின்றன. அவ்வாறில்லாது, இது தமிழ் சமூகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஒரு நோய் இதற்கு ஆரம்பத்திலேயே உரிய மருத்துவம் செய்யாவிட்டால் காலப்போக்கில் வன்முறைக் கும்பல்கள் அனைத்தின்மீதும் மேலாதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டு விடலாம்.
அரசியல் விடயங்களிலும் இவ்வாறான வன்முறைக் கும்பல்கள் உள்நுழையும் காலம் வெகுதெலைவில் இல்லை. வடக்கு மாகாண ஆளுநர், பொலிஸ் திணைக்களம், அரசியல் தரப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் அனைவருமாக இணைந்து, இந்த விடயத்தில் செயலாற்ற வேண்டும். பொலிஸார் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை பொதுவெளிக்கு கொண்டுவந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு பிரச்னையை சமூக மயப்படுத்தினால்தான் அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் காண முடியும்.