ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தனது சுதந்திர தின உரையில், வரலாறு தங்களுக்கு தந்திருக்கும் வாய்ப்பை இழக்கத் தயாரில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர் கூறுவது முற்றிலும் சரியானதுதான் – இலங்கையில் அரசியல் வரலாற்றில், ஆயுத முனையில் அதிகாரத்தை கைப்பற்ற முற்பட்டு – தோல்வியுற்ற ஓர் அரசியல் இயக்கம், இலங்கையை ஆட்சி செய்வது ஒரு வரலாற்று நிகழ்வுதான். ஆனால், ஜனாதிபதி ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் – அதாவது, வரலாறு மனிதர்களின் செயல்களை தீர்மானிப்பதில்லை, மனிதர்கள்தான் வரலாற்றை உருவாக்குகின்றார்கள்.
அனைத்து ஆக்கங்களும் அழிவுகளும் மனிதர்களின் செயல்களின்தான் தங்கியிருக்கின்றது. இதுதான் மனிதகுல வரலாறு. இலங்கையின் நேற்றைய நிலையும், இன்றைய நிலையும் இலங்கையின் அரசியலை கட்டுப்படுத்த முற்பட்டவர்களாலேயே நிகழ்ந்தது, நிகழப் போகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, கடந்த 77 வருடங்களாக இலங்கைத் தீவை ஆட்சி செய்தவர்கள் பாரபட்சத்தையும், மத மேலாதிக்கத்தையும், இன வன்முறையையும் மூலதனமாகக் கொண்டே, இலங்கையின் வரலாற்றை நிலைநிறுத்தியிருக்கின்றார்கள். இதற்கு மாறான ஒரு புதிய வரலாற்றை படைக்கும் வாய்ப்பு இப்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றுப் பணியாக மாறியிருக்கின்றது.
அதனை சரிவர செய்வதற்காக, வரலாறுப் போக்கில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை ஜனாதிபதியும் அவரது அரசியல் குழுவும் தவறவிடுவார்களா அல்லது இல்லையா என்பதுதான், அவருக்கு முன்னாலுள்ள சவால்மிக்க கேள்வியாகும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கொண்டுவருவதற்கான அர்ப்பணிப்பு மிக்க பணியை செய்தால், நிச்சயம் வரலாற்று வாய்ப்பை தவறவிடாத ஒரு ஆட்சியாளர் என்னும் பெருமை அநுரகுமார திஸநாயக்க தலையிலான அரசாங்கத்தை சேரும்தான்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு புரட்சிகர சகாப்தமாக மாறும். இனிவரப் போகும் தலைமுறைகள் தோறும், இன மத மற்றும் பால் பேதங்களைத் தாண்டி, தேசிய மக்கள் சக்தியின் பெயர் உச்சரிக்கப்படும். இது நிகழவேண்டும் என்றால், அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உச்சரித்துவரும் இலங்கை யர் என்னும் நிலைமையை நேர்மையுடனும், தூரநோக்குடனும், முக்கியமாக அரசியல் துணிச்சலுடனும் – அனைத்து மக்களையும் ‘நமது மக்கள’; என்னும் நிலையில் முன்னிறுத்தக் கூடிய அரசியல் மாற்றங்கள் நிகழ வேண்டும். அதன் முதல் படியாக அரசியல் அமைப்பின் அனைத்து ஏற்பாடுகளும், அனைத்து மக்களையும் சரிசமமாக போய்ச் சேரும் வகையில் அரசியலமைப்பு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பை அமுல்படுத்தாது இருந்து கொண்டு, வரலாற்று மாற்றம் பற்றிப் பேசுவதில் பயனில்லை ஜனாதிபதி அவர்களே!