தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள 2023 வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 12 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 12 வீராங்கனைகளின் பெயர்களும் 4 தயார்நிலை வீராங்கனைகளின் பெயர்களும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்தது.
வலைபந்தாட்ட இறுதிக் குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் இடம்பெறுகிறார்.
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா வலைபந்தாட்ட லீக் போட்டியில் பெல்கன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை வலைபந்தாட்ட அணியில் இணைவதற்கு இணங்கியுள்ளார்.
ஒருவேளை, அவர் இலங்கை அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டால் அவரது இடத்தை தயார்நிலை வீராங்கனை இமாஷா பெரேரா நிரப்புவார் என சம்மேளனம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான இலங்கை அணியில் இடம்பெற்ற 12 பேரில் 9 பேர் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
ஆசிய கிண்ண வலைபந்தாட்டத்திற்கான இலங்கை அணியில் தயார் நிலை வீராங்கனைகளாக இடம்பெற்ற திசலா அல்கம, காயத்ரி கௌஷல்யா, ஷானிக்கா பெரேரா ஆகிய மூவரும் உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி தமயன்தி ஜயதிலக்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இறுதி தேர்வின்போது வலைபந்தாட்ட உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை தெரிவுசெய்தனர். தெரிவுக் குழுவில் திசாங்கனி கொடிதுவக்கு, சாமிக்கா ஜயசேகர ஆகியோரும் இடம்பெற்றனர்.
இந்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் அரங்கில் ஜுலை மாதம் 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜெமெய்க்கா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, உகண்டா, டொங்கா, பிஜி, மலாவி, ஸிம்பாப்வே, இலங்கை, சிங்கப்பூர், ஸ்கொட்லாந்து, வேல்ஸ், ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, பார்படோஸ் ஆகிய 16 நாடுகள் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.