வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில், இன்று இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வாகனம், ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
இதனால், வாகனம் கடும் சேதமடைந்த நிலையில், அதனைச் செலுத்திச் சென்ற வைத்தியர், படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வவுனியா வைத்தியசாலை முன்னாள் பணிப்பாளருமான கு.அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதம் அடைந்துள்ளதுடன், வாகனம் முந்திச் செல்ல முற்ப்பட்ட போதே, விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், ஓமந்தை பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.