வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பொன்னாவரசன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று காலை இடம்பெற்ற போது அங்கு வந்த ஒரு குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக உடனடியாக நால்வர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 4 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 20 இற்கு மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களில் குறித்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.