விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 08 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க, ஆடிஅம்பலம் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பங்களாதேஷ் பிரஜைகள் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 30 வயதுக்குட்பட்ட எட்டு பங்களாதேஷ் பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மினுவாங்கொடை நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.