உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமேஸான் அதிபர் ஜெஃப் பெசோஸ் தனது புளூ ஆரிஜின் நிறுவனம் உருவாக்கிய விண்கலம் மூலமாக விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். இதன்மூலமாக, தனது பால்ய வயது கனவு நனவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/blue-origins-space-capsule-2-1623143614.jpg)
ஆன்லைன் புத்தக விற்பனை தளமாக தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் தளமாக மாறி இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் அமேஸான் நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். வரும் ஜூலை 5ந் தேதி அமேஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், தனது நிறுவனங்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/blue-origins-space-capsule-13-1623143700.jpg)
இந்த நிலையில், தனது சிறு வயது கனவாக இருந்து வரும் விண்வெளிப் பயணம் விரைவில் நனவாக இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். அதாவது, எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாத் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் அவர் ஏற்கனவே இறங்கி இருப்பது தெரிந்த விஷயம்தான்.
புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்கலத் தயாரிப்பு நிறுவனத்தை இரு தசாப்தங்களுக்கு முன்னதாகவே அவர் துவங்கியதும் தெரிந்ததே. இந்த நிலையில், புளூ ஆரிஜின் நிறுவனம் உருவாக்கி இருக்கும் விண்வெளி சுற்றுலாவுக்கான முதல் விண்கலத்தில் அவர் பயணிக்க முடிவு செய்துள்ளார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/blue-origins-space-capsule-1-1623143606.jpg)
அதாவது, தனது நிறுவனம் உருவாக்கி இருக்கும் விண்கலத்தில் முதலாவதாக அவரே பயணிக்க திட்டமிட்டுள்ளார். தனது சகோதரர் மற்றும் மற்றொருவருடன் இந்த விண்வெளி பயணத்தை அடுத்த மாதம் 20ந் தேதி துவங்க இருப்பதாக சமூக ஊடகம் மூலமாக தெரிவித்துள்ளார். ஷெப்பர்டு கேப்சூல் என்ற அந்த விண்கலத்தில் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் செல்ல இருக்கின்றனர். இந்த பயணம் 10 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டல அடுக்கிற்கும், விண்வெளிக்கும் இடையிலான கார்மன் கோடு பகுதிக்கு மேலே இவர்கள் 4 நிமிடங்கள் செலவிட உள்ளனர்.
இந்த விண்கலத்தில் செல்வதற்கு ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் தவிர்த்து மூன்றாவது நபருக்கான இருக்கை உலக அளவில் ஏலம் விடப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 6,000 பேர் இந்த விண்வெளிப் பயணத்திற்கு ஆர்வம் தெரிவித்து விண்ணப்பித்தனர். இதில், ஒருவர் 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி) வரை ஏலம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.