அமெரிக்காவின் டென்வர் நகரில் பயணிகள் விமானம் ஒன்று தீ விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் டயர் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அவசர கதவு வழியாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ள வீடியோ காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளதுடன் சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், விமானத்தில் இருந்து புகை வெளியேறுவதை காண முடிகிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.