வில்லியம்சன் அபார சதம்; மிகவும் பலமான நிலையில் நியூஸிலாந்து

0
18

ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (16) நினைத்தப் பார்க்க முடியாததும் மிகவும் கடினமானதுமான  658 ஓட்டங்கள் என்ற  வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, இன்றைய ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற நேரிட்டது.

நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 56ஆவது ஓவரில் 2ஆவது பந்தை வீசிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அரங்கைவிட்டு வெளியெறினார்.

இது இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதேவேளை, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைக் குறிவைத்து நியூஸிலாந்து விளையாடி வருகிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களிலிருந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைக் குவித்தது.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மிகத் திறமையாக, அதேவேளை, சற்று வேகமாகத் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தினார்.

204 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் 20 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 156 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரச்சின் ரவிந்த்ராவுடன் 4ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 5ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

ரச்சின் ரவிந்த்ரா 44 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 60 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மிச்செல் சென்ட்னர் 49 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெக்கப் பெத்தெல் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 179 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடந்த 14ஆம் திகதி ஆரம்மான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.