வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து

0
80

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இதுவரையில் எவ்விதமான மறுப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஈரானின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்கு ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இலங்கை அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல், ஈரான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கை அரசாங்கமானது அணிசேராக் கொள்கையுடன் அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு, பல்தரப்பு உறவுகளைப் பேணிவருவதாகவும், ஈரான் ஜனாதிபதியின் வருகையினால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என கரிசனை கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.