உலக அரசியல் என்றுமில்லாதவாறு அதிகார சக்திகளின் போட்டிக்களமாக மாறிவருகின்றது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் நிலைமைகளை எவ்வாறு கையாளப் போகின்றது – அதற்கு சீனாவின் எதிர்வினைகள் எவ்வாறு அமையப் போகின்றன.
அமெரிக்க – சீன உலகளாவிய போட்டியில் மேற்குலகும் கிழக்குலகும் எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றன என்பதைக் கொண்டே, உலக அரசியல் தீர்மானிக்கப்படப் போகின்றது. ட்ரம்பின் அறிவிப்புகள் ஒருபுறம், அவரின் மிரட்டிவிட்டு அமைதியடையும் வழமையான பேச்சுகளாக நோக்கப்பட்டாலும்கூட, அவரின் அனைத்து அறிவுப்புகளுமே அவ்வாறான தன்மையுடையவையல்ல.
ட்ரம்பின் முதல் நிர்வாகத்தின்போது சீனாவுக்கு எதிரான கடும்தொனி பிரசாரங்கள் முடக்கிவிடப்பட்டன. அமெரிக்காவின் பிரதான பிரச்னை சீனா என்பதாகவே அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறை மாறியது. பின்னர் அதிகாரத்தை கைப்பற்றிய பைடன் நிர்வாகம் ட்ரம்ப் தொடர்பில் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும்கூட, சீனா தொடர்பான அணுகுமுறைகளில் ட்ரம்பின் நிர்வாகத்தின் அணுகுமுறையையே பைடன் நிர்வாகமும் தொடர்ந்தது.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் கட்சிரீதியில் மோதுவது, ஒருவரையொருவர் கடுமையாக சாடுவது என்பதெல்லாம் உள்நாட்டு அரசியல் விவகாரம் மட்டும்தான். சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்க நலன் என்பதில் அனைவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். சீனா தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையையே பைடன் நிர்வாகம் மென்போக்கில் முன்னெடுத்தது.
தற்போது ட்ரம்பின் இரண்டாவது நிர்வாக காலத்தில் சீனா தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதற்கான வாய்ப்பே தெரிகின்றது ஏனெனில், சீனா இராணுவ மற்றும் தொழில்நுட்ப விடயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கும் ஒரேயொரு சக்தி. இந்த நிலையில் அதனை எதிர்கொள்ளும் உபாயங்கள் தொடர்பில் அமெரிக்க ஆளும் தரப்பு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.
உலக அரசியலில் ஏற்படும் சடுதியான மாற்றங்களுக்குள் ஈழத் தமிழர் பிரச்சினையெல்லாம் ஒரு விடயமாகவே இருக்கப் போவதில்லை. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரையில் அதிகம் நாடு தழுவிய அணுகு முறையே மேலோங்கியிருக்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட உலக அரசியல் சூழல் தற்போது தலைகீழ் நிலையை அடைந்திருக்கின்றது. மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னரைப் போன்று உலகம் அதிக கவனம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை.
ஏனெனில், காஸாவில் ஹமாஸூக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கையின்போது, மேற்குலகின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருக்கின்றது. அத்தோடு ‘இப்போது நீங்கள் இல்லாவிட்டால் – அவர்கள்’, என்றவாறு தெரிவுகள் உருவாகிவிட்டன. சிறிய நாடுகள்மீது மனித உரிமைகள் சார்ந்து அதிக அழுத்தங்களை பிரயோகித்தால் அவர்கள் சீனாவை நோக்கிச் சாய்ந்து விடும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இது மேற்குலகுக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. இந்தப் பின்புலத்தில்தான், ஈழத் தமிழர் விவகாரம் கவனிப்பாரற்ற விவகாரமாக சுருங்கிவிட்டது. இந்த அரசியல் சூழலை கருத்தில் கொண்டுதான் தமிழர் தரப்புகள் சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லாது தொடர்ந்தும் ஒரு சில சுலோகங்களில் சுகம்காண முற்பட்டால் வழமைபோல் பேச்சு பல்லக்கு தம்பி பொடி நடை என்பது போலவே ஈழத் தமிழர் அரசியல் முற்றுப்பெறும்.