இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பிரதானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். எனவே, தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த உணவுப் பொருள்களில் புற்றுநோய் மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்பதையும், அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தொடர்பிலும் நாட்டு மக்களுக்கு விரைவில் வெளிப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த வருடம் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தமிழ் – சிங்கள புத்தாண்டை நாட்டு மக்களுக்கு கொண்டாட முடியாமல் போனது. எனினும் இந்த ஆண்டு புற்றுநோய் மூலக்கூறுகள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி அச்சத்தில் மக்களால் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மிக்க இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.
அத்தோடு இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவுப் பொருள்களிலும் புற்றுநோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார்.
அந்த உணவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவரால் பல சிறந்த விடயங்களும் செய்யப்பட்டன. உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குளிர் பானங்கள் தொடர்பில் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறெனில் இந்த விவகாரத்திலும் அவர் நேரடியாக தலையிட்டு தீர்மானங்களை எடுக்க முடியும்.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தில் மாத்திரம் ஏன் வர்த்தகர்களுக்கு சாதகமாக செயற்படுகின்றார்? யுத்தம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை விடவும் அச்சுறுத்தலான நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
எனவே தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த உணவு பொருட்களில் புற்றுநோய் மூலக்கூறுகள் உள்ளன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.