ஸ்வீடனில் குர்ஆனை எரித்ததற்கு எதிர்ப்பு: கலவரம் தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது

0
156

ஸ்வீடனில் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீவிர வலதுசாரி குழுவின் திட்டங்களால் கோபமடைந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று, கலவரக்காரர்களை எச்சரிக்கும் விதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தீவிர வலதுசாரி டென்மார்க் அரசியல்வாதியான ராஸ்மஸ் பலுடான், தான் குர்ஆனின் ஒரு பிரதியை கொளுத்தியதாகவும், வருங்காலத்திலும் அவ்வாறே செய்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தெற்கு நகரமான லிங்கோபிங் நகரத்தில் காவல்துறை முன்னிலையில் ராஸ்மஸ் பலுடான் குர்ஆனை எரிக்க முயன்றார். இதையடுத்து, ராஸ்மஸ் பலுடான் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.
குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு சௌதி அரேபியா, இரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக, இராக், இரான் ஆகிய நாடுகள் அவற்றின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தங்கள் நாட்டில் உள்ள ஸ்வீடன் தூதர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விளக்கம் கேட்டன.